×

காஸ் கசிவால் தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்: ஆபத்தான நிலையில் சிகிச்சை


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, காஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு ஆற்றங்கரை தெரு, திரவுபதி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (28). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டிங் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா (25) என்ற மனைவியும், 2 வயதில் பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சமையலறையில் உள்ள சிலிண்டரிலிருந்து காஸ் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதுதெரியாமால், குழந்தை பவதாரணிக்கு பால் காய்ச்ச, கீர்த்தனா சமையலறைக்குள் சென்று அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, குபீரென தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது. இதனால், அதிர்ச்சியான கீர்த்தனாவின் அலறல் சப்தம் கேட்டு, அவரை காப்பாற்ற முயன்ற சுடலைமணி மீதும் தீப் பிடித்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட மூவரும் படுகாயமடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, 50 சதவீத தீக்காயத்துடன் இருந்த சுடலைமணி மற்றும் கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 20 சதவீத தீக்காயங்களுடன் இருந்த குழந்தை பவதாரிணிக்கு, தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்மப்பொருள் ஏதேனும் வெடித்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஸ் கசிவால் தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்: ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Sewilimedu ,Sevilimedu Riverside Street ,Draupathi Amman Temple ,Kanchipuram Corporation ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...